Pages

  XX & XY: யாருக்காக..




அலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை,  எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும்  “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள்.  குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.

எனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன.  ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்?” - சொன்னது வாசுகி.

பெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப்  பேசிக்கொண்டிருந்தாலும்,  ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.

குழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY  :-))) )  பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை.  தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY? Why not only XX or XY? என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.

இருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’  கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன்.  குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.

பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க   அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.

குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.

எனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே? மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும்!! பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது  தவறுதானே? :-))

சில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவைப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள்  - கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. - பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

இன்னுமொரு விஷயம் அவதானித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே  கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.  என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் - திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது  போலவே.

டாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட,  இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது!!  வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?

அடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இருக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு!! ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்!!). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு!!

அத்தோடு, சமீப காலங்களாக  டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் - வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில்,  ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.

இவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில்! அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும்!! அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு,  தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம்,  குடும்பத்தையும் மிஸ் பண்ண மாட்டாங்க.

வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்..  இல்லை..  காலில்!!
 
  
  
 

Post Comment

ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்




மூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில், என்கூட  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘நேலியஸ்’ என்ற இளைஞன் வேலைபாத்தான். அவனுக்கு அந்த வேலையில இஷ்டமேயில்லை (நாங்கல்லாம் மட்டும் என்ன பிடிச்சாச் செய்துகிட்டிருந்தோம்? ;-) ) சேந்தாப்ல 15 நிமிஷம் அவன் சீட்டில் இருந்தான்னா, அவன் யூ-ட்யூப்ல காமெடி சீன் அல்லது ஃபுட்பால் பாத்துகிட்டிருக்கான்னு அர்த்தம்.

அவனுக்கு பைலட்-ஆகணும்னு ஆசை;  நான்கூடக் கிண்டலாச் சொல்வேன், நீ பைலட் ஆனதும் எந்த ஏர்லைன்ஸ்ல வேலைபாக்கிறேன்னு எனக்குச் சொல்லிடு; அதுல நான் ஏறவே மாட்டேன். ஃப்ளைட் ஒட்டும்போது, இப்படி எழுஞ்சு எழுஞ்சு போய்ட்டியானா என்ன செய்றது?ன்னு. அதுக்கவன், “தட்ஸ் மை ட்ரீம் ஜாப். But this is a job which I dont want to do even in my dreams!!”னு சொல்வான்.

ஆனா, மேற்கத்திய கலாச்சாரப்படி, படிப்புக்கான செலவை அவனே பாத்துக்க வேண்டிய சூழல். அதனால், அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டிருந்தான். இது அவனோட கேரியர்ல N-நம்பராவது வேலை!! மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும்? அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு!! அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது.  (தென்னாப்பிரிக்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு!)

ஒரு கட்டத்துல, அலுவலக உள்ளரசியலில் மாட்டி, (வழக்கம்போல்) வேலையை ரிஸைன் செய்தான். அடுத்து, தான் தென்னாப்பிரிக்கா சென்று, படித்து பைலட் ஆகப்போவதாகவும், படிப்பதற்கு தன் கேர்ள் ஃப்ரண்ட் ஸ்பான்ஸர் செய்யப்போவதாகவும், வேலை கிடைத்த பின் அவளின் கடனை அடைக்கப் போவதாகவும் சொன்னான்.

அதே சமயத்தில், எங்களின் காண்ட்ராக்டரின் பிராஜக்ட் மேனேஜர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மகன் பைலட் ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பதாகவும், மகன் அடுத்த செமெஸ்டரிலிருந்து ஃபீஸ் கூடப்போவதாக வருத்தப்பட்டதாகவும், தான் மகனை அதுகுறித்து கவலைப்படவேண்டாம், படிப்பை மட்டும் பார் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் நேலியஸை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரும் பேசியபோது, அவர் கேட்டார், “உன் தந்தை ரிடயர்மெட் ப்ளானில் பணம் போட்டுள்ளாரா?” என்று கேட்க, அவன் ஆமென, அவர், “உன் தந்தை இன்ஷ்யுரன்ஸை நம்புகிறார்; நானோ எனது மகனின் பாசத்தில் இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.”

சிலகாலம்முன் (இப்போதும் இருக்கலாம்), ஒரு விளம்பரம் வரும். பேரன் தாத்தாவிடம் பிறந்தநாள் பரிசாக, சைக்கிள் வாங்கிக் கேட்க, அவரது தர்மசங்கர்டத்தைத் தவிர்க்க, மகன் பணம் தரமுன்வர, பேரனோ ஏற்கனவே தாத்தா வாங்கித் தந்த சைக்கிளில் சுற்றிவருவான். ரிடையர்மெண்ட்  பிளான் ஸ்கீம் விளம்பரம்!!

இந்தியக் கலாச்சாரப்படி, வயதான காலத்தில் பெற்றோரைப் பாதுகாப்பதென்பது (மூத்த) மகனின் கடமை. ”My time", "Time-out", தனித்தனி செல்ஃபோன்கள்,  என்று இக்காலம் போல எதுவும் இல்லாமல், குடும்பத்துக்காகவே மட்டும் உழைத்த பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதைவிட, பிள்ளைகள் அதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். (செயல்படுத்தமுடியவில்லையென்றாலும்கூட). எனினும், இந்திய சமுதாயத்தில் இது மகனுக்கு மட்டுமே உரித்தான கடமையாகப் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் உடைய பெண்கள், தம்மோடு பெற்றோரை வைத்துக் கொள்வதென்பது, மகன் வெளிநாட்டில் இருக்கிறார்; அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே. மகள்கள் மட்டுமே உள்ள பெற்றோரெனில், மகள்கள் இதைச் செய்யத் தயங்குவதில்லை. எனினும், இவ்வாறு மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள்.

காலங்கள் மாறி வருகிறது. மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் இப்படியொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிற அதே சமயத்தில், சென்ற தலைமுறை பெற்றோர்கள் இன்னமும், மகன்களோடு இருப்பதே பாரம்பரியம் என்று எண்ணிக்கொண்டிருக்க, இத்தலைமுறை பெற்றோர்களிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது - அது ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீமில் மறக்காமல் இன்வெஸ்ட் செய்வது!! மகனோ, மகளோ - யாரோடு வசித்தாலும் ஒன்றுதான்  என்பதாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம், மகனோ, மகளோ நம் வயசுகாலத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  லைஃப் இன்ஷ்யூரன்ஸ், மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்க்கு இணையாக ரிடையர்மெண்ட் வாழ்க்கைக்கும் பிறரைத் தொந்தரவு செய்யாமல் வாழ இளமையிலேயே திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

விண்ணைத்தாண்டிப் போகும் விலைவாசி, பெருகிவரும் செலவினங்கள், பயமுறுத்தும் புதிய புதிய நோய்கள், முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்களால் கூடியிருக்கும் ஆயுட்காலம், பெற்றொரைப் பார்த்துக்கொள்ள ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்த காலம்போய், ’நாமிருவர், நமக்கேன் ஒருவர்’என்று மாறிவரும் ஸ்லோகன்கள் எல்லாம்சேர்ந்து இந்த ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்களை பிரபலப்படுத்தி வருகின்றன!!

முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின் விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.

   
 

Post Comment

FOLLOW-UPs




   

 எவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது? அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா? அதான் என்னோட சில பதிவுகளுக்கே  நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..

அதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா? பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம்!! (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே?)

1.  சுரங்கமே வீடாக:

சிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில்.  நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள்!! மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு!! எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.

சிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.

சாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”!!!

அவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான  மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்டு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர்!! அவை என்ன தெரியுமா? வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும்!! ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்!!

2.  திருத்தாத தீர்ப்புகள்:

இந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்(!!) தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்!!

3.  டிரங்குப் பொட்டி -10:

இதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க!! (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில!!) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது!! அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.

எனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!! நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள்!! இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....     

4.  அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!

இந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு!! இப்ப ஞாபகம் வந்துருச்சா? மார்ச் 22!! பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம்.  ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம,  அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து.  நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.

 எச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்!!
   
    

Post Comment

அம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்




 
பள்ளியிறுதி படிக்கும்போதுதான், தமிழ்நாட்டில் சென்னையில் வேரூன்றியிருந்த ‘சுடிதார்’ தின்னவேலியில் கிளைவிட ஆரம்பித்திருந்தது. வீட்டில் அதுபற்றியெல்லாம் வாய் திறக்க முடியாதென்பதால், கல்லூரிக்குப் போனால் எப்படியாவது ”முறைப்படி” அனுமதி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில்  கல்லூரியில் சேலைதான் உடுத்த வேண்டுமென்ற விதி மண் போட்டது!!

கல்லூரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனதால், சேலை சகஜமாகிவிட்டிருந்தது. முதலாம் காலேஜ் டேயை ஆர்வத்துடன் எதிர்கொள்ள, வகுப்புத் தோழிகள் மறுநாள் (திங்கட்கிழமை) பட்டுச் சேலை கட்டிவர முடிவெடுத்தோம்.

அன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பரவசத்தோடயே யோசிச்சுகிட்டு வந்தேன். எனக்குனு தனியா சேலைகள்லாம் கிடையாது. அம்மாவோட சேலைகளைத்தான் நானும் கட்டிக்குவேன். அம்மா பொன்னுபோல வச்சிருந்த (ஃபாரின்) சேலையெல்லாம் நான் ’பின்’னா குத்தி வம்பாக்கிறேன்னு அம்மாக்கு ஏற்கனவே ரொம்ப கோவம். (சேலை ஒரு லொள்ளு - அங்கங்கே ‘பின்’ குத்தினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்). தனியா சேலைகள் வாங்கிக் கேட்டும் ரெண்டு பெருநாளைக்கின்னு ரெண்டே ரெண்டுதான் கிடைச்சுது. சாதாரண சேலயக் கட்டும்போதே முணுமுணுத்துகிட்டு இருப்பாங்க, இப்பப் பட்டுச் சேலையைக் கட்டப் போறேன்னு சொன்னா என்னென்ன திட்டு விழுமோன்னு பயமாவும் இருந்துது. திட்டினாலும் கட்டித்தானே ஆகணும், எந்தப் பட்டைக் கட்டலாம்னு சிந்தனை வந்தப்போத்தான் ஒரு விஷயம் உறைச்சுது. பட்டுச் சேலை!! வீட்டில ஒரு பட்டுச் சேலை கூட கிடையாது எனபது அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது.

அம்மா, அப்பா டெல்லியிலிருந்து வீட்டைக் காலி செய்து வரும்போது ரயிலில் லக்கேஜில் போட்ட பட்டுச்சேலைகள் இருந்த பெட்டியும், பாத்திரபண்டங்கள் எல்லாமும் திருடு போய்விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால்  அதன்பிறகு இந்தப் பதினஞ்சு வருஷமா ஒரு பட்டுப் புடவைக்கூட வாங்கவில்லையா?? அப்படின்னா??!!

இந்தா, பஸ்ல போனா, ஒரு 10 நிமிஷ தூரம்தான் ஆரெம்கேவி. 700-800 ரூபாய்க்கே சாதாரண ஒத்தை வரிச்சரிகை பட்டு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் நடக்கிற காரியமா? ரெண்டுநாளா லேசா அனத்தியும் ஒண்ணும் நடக்கலை.  கண்ணீரும், இயலாமையுமா முனங்கிக் கொண்டே, பட்டுப்போன்ற ஸாட்டின் சேலையை உடுத்துக் கொண்டு போனேன்.


வாப்பா வெளிநாட்டுல இருக்காங்கன்னாலும்,  வாப்பாவோடது  ’வாழ்ந்துகெட்ட குடும்பம்’ கிறதால, வறுமை அப்ப முழுசா வெளியேறலை. அப்பாவின் வருமானம் மட்டுமே; 10 பேர் கொண்ட பெரிய குடும்பம்; பெரிய அத்தையின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தாங்க வேண்டியிருந்தது. இதனால் ஒரு ‘லோயர் மிடில் கிளாஸ்’ என்ற அளவில்தான் இருந்தோம்.

அம்மாவுடையதோ, மிகப் பணக்காரக் குடும்பம் - வீடு நிறைய வேலையாட்கள், இரட்டை மாட்டு வண்டி, ஃபியட் கார், பல ஏக்கரா வயல்கள், தியேட்டர், அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா வீடு கல்யாணமாகி வரும்போது இருந்ததுக்கு  இப்ப எவ்வளவோ பரவாயில்லை என்று அம்மா சொல்வதுண்டு.


பத்து வயதிலேயே தன் அம்மாவை இழந்து, உடன்பிறந்த எட்டுப் பேரையும் கவனித்தவர். திருமணத்தால் சித்தியிடமிருந்து சீக்கிரம் தப்பினாலும், கடைசி வரை மாமியார் ஆதரவும் கிட்டாமல் போனது சோகம். அதனாலேயே, எங்கள் நால்வருக்கும் வரன் தேடும்போது,  ஒத்தைப் பிள்ளைக்கு என் பொண்ணுங்களைக் கொடுக்க மாட்டேன்னு ஒத்தக்காலிலே நின்னாங்க. (வாப்பாவும் ஒரே மகன்). ஏன்னா, “இளைய மருமக வந்தாத்தான் மூத்த மருமகளோட அருமை தெரியுமாம்”. கரெக்டா அதுபோலவே செயல்படுத்திட்டாங்க!!

ஒருமுறை தெருவிலுள்ள கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டபோது, நகராட்சிக்குப் பலமுறை ஃபோன் செய்தபின்,  தாமதமாக வந்த ஊழியர், சும்மா இராமல் அம்மாவிடம் “ஏம்மா, (முனிசிபல்) சேர்மன் மக வீடுன்னு ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா உடனே வந்திருப்போம்ல?” என்று சொல்லி வாங்கிக் கட்டி,  “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா?”ன்னு நொந்துகிட்டார்.

பொறந்த வீட்டுல வசதியில கொழிச்சவங்கன்னாலும், இங்க வந்து நிலைமைக்கேற்ற மாதிரி சிக்கனமா நடந்துகிட்டாங்க!! அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன்!! அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது!! :-(  வீட்டு வேலைகளுக்கிடையில நேரம் கண்டுபிடிச்சு, பீடி சுத்தவும், துணி தைக்கறதும் செஞ்சாங்க. வாப்பாவோட விருப்பமின்மையால விட்டுட்டாங்க.

ஒரு பென்சில், ரப்பர் வேணும்னாலும் கெஞ்சிக் கூத்தாடணும். இந்தச் சிக்கனம் (எ) கஞ்சத்தனத்துக்கு நாங்க 6 பேரும் (2 நாத்தனார்கள்+4 மகள்கள்) காரணம்னு நல்லாத் தெரிஞ்சாலும், கோவம் கோவமா வரும். இருக்கட்டும் ஒருநாள் இதுக்கெல்லாம் சேத்து வச்சுக்கிறேன்னு தோணும். நினைச்ச மாதிரியே, இப்ப வச்சிருக்கேன் நிறைய - நன்றிகளை!! அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது!! இந்தச் சிக்கனப் பாடம்தான், என்னை என் கல்யாணச் சேலையைக்கூட திட்டமிட்டதைவிட பாதிவிலையில் எடுக்க வைத்ததுபோல!!

பிறகு 2 அத்தைகளும் கல்யாணமாகிப் போனார்கள். அடுத்து நாங்கள் இரு சகோதரிகள். என் தலைப்பெருநாளில் வீட்டுக்கு வந்த நான் அதிர்ச்சியானேன்!! காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது!! முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்!!

அப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க!! லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன? முடியுள்ள மகராசி அள்ளிமுடி”ன்னேன்!!
 
 

Post Comment

ட்ரங்குப் பொட்டி - 12




 


இந்தியாவிலருந்து அமெரிக்கா போற பெருந்தலைகளைக் கூட விடாம (ஜனாதிபதி உள்பட), அமெரிக்க போலீஸ் ஸ்கேன் பண்ணி செக் பண்ணுறாங்க. இங்க லோக்கல்ல உதார் விடுற பெருந்தலைகளும், அங்க கைகட்டி, வாய்பொத்தி ”ரூல்ஸ்படி”  நடந்துக்கிறாங்க. ஆனா,  பக்கத்து நாடு பாகிஸ்தான்லருந்து ராணுவ கான்ஃபெரன்ஸுக்காகப் போன ராணுவ அதிகாரிகளை, இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச?”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க!! அவிங்க ரோஷக்காரங்க!!

)( )()( )()( )()( )()( )(

ஆப்பிரிக்க, கிழக்காசிய மற்றும் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் மட்டும்தான் ‘கொசு’ என்ற ஜீவி உண்டு. வேற எங்கயும் கிடையாதுன்னு அப்பாவியா நினைச்சுகிட்டிருந்தேன். அதுலயும், ஐரோப்பாவிலெல்லாம் ’கொசுவா - கிலோ எவ்வளவு’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சேன். இப்ப சமீபத்துல,  ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்!!

)( )()( )()( )()( )()( )(
ஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம்!! அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம்!! இது பரீட்சார்த்த முறைதான், இன்னும் முழுசா செயல்படுத்தலன்னு நிறுவனம் அடுத்த நாளே உஷாரா அறிக்கை விட்டுடுச்சு. ஏற்கனவே இவ்விமானங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்!!

)( )()( )()( )()( )()( )(

என் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா?” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு!!” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்!! :-((((
 
)( )()( )()( )()( )()( )(

 பலவித சர்ச்சைகளுக்கு நடுவே, காமன்வெல்த் விளையாட்டுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. நம்ம நாட்டுல, ஊடகங்களுக்குச் சீக்கிரமே ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தா நல்லது. இவங்களால, உலக நாடுகள் முன், நம்மளே நாமே அவமானப்படுத்திகிட்டோம்!! ஊழல்களை வெளிக்கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என்றாலும், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் முன் தாழ்ந்துகொண்டே போகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சிகள் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டலை’ என்ற ரேஞ்சுக்கு கொஞ்சம் காப்பாத்தியிருக்கின்றன. நிகழ்ச்சியில், சிறுவர்கள் துணியில் இன்ஸ்டண்டாக மெஹந்தி டிஸைன் வரைவது அற்புதம்!!

)( )()( )()( )()( )()( )(

தலைநகர் டெல்லியில (நிஜக்)குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்!! அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள்!! ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது  குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம்!! ம்ம்.. இதுக்கென்ன colour code குடுப்பாங்களோ..

)( )()( )()( )()( )()( )(

1978ல் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கி,  IVF தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ராபர்ட் எட்வர்டுக்கு 2010ம் வருடத்தின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குழந்தையில்லா தம்பதியர்களில் லட்சக்கணக்கினரின் வாழ்வில் இதன்மூலம் மகிழ்ச்சி தந்தவர்; உலகெங்கும் இதுவரை 4 மில்லியன் குழந்தைகள் இந்த IVF மூலம் பிறந்துள்ளன; அப்பேர்பட்டவருக்கு இவ்வளவு தாமதமாகவாகவா நோபல் வழங்குவது என்று மருத்துவத்துறை குரல் எழுப்புகிறது.

அதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது!!
  
 

Post Comment

அப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா?!!




 கமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்

இங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும்  எந்திரன் படம் பார்த்தோம்!!

ஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு  நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே? முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல!! (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்!!)

அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் (!!) போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..


சிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது!! மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம்  கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...

சரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு  முழுசும்கூட பத்தாது!! எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன?

ஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம்!! ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது!!

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...

இந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல!! இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!! இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ?! (பத்த வெச்சுட்டியே பரட்டை... )

4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ? எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது.  ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ? அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.


சன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும்  ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை,  வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம்!!  ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன!!

மொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை!!
 
 

Post Comment

பிள்ளைக்குப் பரிசு




 
 
மதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.

அவரிடம் நபியவர்கள்  வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்!” என்றார்.

 “என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!!” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று வினா எழுப்பினார்கள்.


www.dailymail.co.uk

ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது.  அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child"!! இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது.  பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.

மூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன்   --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை?

ஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்!!
  
 www.lifeskills4kids.com.au
   
  

Post Comment