Pages

கான மயிலாட...





நோன்புகால சிறப்பு இரவுத் தொழுகையான தராவீஹ் நடந்துகொண்டிருந்தது. தொழுகையை முன்னின்று நடத்தும் இமாம், குர் ஆன் வசனங்களை கிராஅத் முறையில் உள்ளம் நெகிழ்ந்து ஓதிக் கொண்டிருக்க, கேட்பவர்களும் உருகிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்ணீரோடு. (கிராஅத் = தெளிவான உச்சரிப்போடு, அவசியமான ஏற்ற இறக்கங்களோடு ஓதுவது - கேட்டுப் பாருங்க)

அமீரகத்தில் பெண்களுக்கு அநேகமாக எல்லாப் பள்ளிவாசல்களிலும் தொழ இட வசதி இருக்கும். ஆண்களைப் போல, பெண்கள் பள்ளிக்கு வந்துதான் தொழவேண்டும் என்கிற கட்டாயமில்லை. எனினும், கூட்டுப் பிரார்த்தனையில் ஒரு மனநிறைவு கிட்டும். பள்ளிவாசல்களில் இருக்கும் ஏகாந்த அமைதி, பிரார்த்தனையில் அதிகம் ஒன்றச் செய்யும்.

தொழுகையில் அங்கேயிங்கே திரும்பவோ, பேசவோ கூடாது. பேச்சு, இறைவனோடு மட்டும்தான்!!  கூட்டுத் தொழுகையில், இடைவெளி ஏதுமில்லாமல் தோளோடு தோள் ஒட்டி வரிசைக்கிரமமாக நிற்பது மிக மிக முக்கியம்.  ஒருநாள் பின்வரிசையில் தொழ ஆரம்பித்திருந்த என்னை, சேட்டைக்காரப் பிள்ளையை ஹெட்மிஸ்ஸிடம் இழுத்துச் செல்லும் டீச்சரைப்போல ஒரு ‘இரும்புக்கை’ இழுத்து முன்வரிசையில் ஏற்பட்டிருந்த காலியிடத்தில் நிறுத்தியது!!

சின்ன வயதில், ஊரில், இந்த நோன்புகால சிறப்புத் தொழுகையை, சில பெண்கள் சேர்ந்து,  ஒருவரின் வீட்டில் கூட்டாகத் தொழுவார்கள். மொத்தம் 20 ரக் அத்துகள் (முறைகள்) கொண்ட தராவீஹ் தொழுகையை, ஒரே பெண்ணே மொத்தமாக முன்னின்று தொழுகை நடத்தாமல், ஈரிரண்டு ரக் அத்தாக, பத்து பெண்கள் முறைவைத்துத் தொழ வைப்பார்கள்.  அதற்கான (அப்போதைய) தகுதி, குர் ஆனை முழுதாக முறையாக ஓதப் பயின்றிருக்க வேண்டும், சீனியராகவும் இருக்க வேண்டும்.

என்னைப் போல, அம்மாக்களோடு அங்கு தொழ வரும் சிறுமிகள் ஐந்தாறு பேருக்கும் ஒரே இலக்கு, தொழுகை முடிந்ததும் விளம்பப்படும் டீ, நன்னாரி சர்பத் அல்லது ரோஸ்மில்க்!! (அதிலும் சப்ஜா விதைகள் போட்ட ரோஸ்மில்க் இருக்கே... ம்ம்ம்ம்... யம்மி!! )  பிறகு ‘ஆளும் வளர்ந்து, அறிவும் வளர்ந்ததில்’,  தொழுகையில் சீரியஸாகி, குர் ஆன் வாசிக்கவும் கற்க ஆரம்பித்தேன்.

நான் குர் ஆனை முழுமையாக ஓதியது, ஒரு முஸ்லிம் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோதுதான்.  அங்கே,  முதல் ரேங்க் வாங்கும் நானும், பாஸாவதற்கே சிரமப்படும் சல்மாவும் ஒரே வகுப்பு. சல்மாவின் சிறப்புத் தகுதி, குர் ஆனை கிரா அத் முறையில், கேட்கும் நம் மனமுருக ஓதுவது. அவளின் தாத்தாதான் இதைப் பயிற்றுவித்தாராம்.

அவளிடம் குர் ஆனின் ‘அர் ரஹ்மான்’ என்ற அத்தியாயத்தை அடிக்கடி ஓதச் சொல்லிக் கேட்பேன். "இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்" என்ற பொருள் பொதிந்த “ஃபபி அய்யி ஆலாயி ரப்பிக்குமா துகத்திபான்’ என்ற வரிகளை அவள் இழுத்து ராகமாக ஓதக் கேட்கும்போது, என்ன சொல்வது... அது ஒரு டிவைன் ஃபீலிங்!! அப்படிக் கேட்டுக்கேட்டு, ‘அர்ரஹ்மான்’ அத்தியாயம் என் மனதில் தனி இடம் பிடித்துக் கொண்டது.

ஒருமுறை அவள் என்னிடம், “பாரேன், எனக்கு அழகா ஓத வருது, ஆனா படிப்பு வரலை. ஆனா, உனக்கு படிப்பு நல்லா வருது; என்னைப் போல நல்லா ஓத வரலை” என்று சொல்ல, உடனே, “அதெல்லாம் நான் சாதாரணமா ஓதுறதே போதும். கிரா அத்தாத்தான் ஓதணும்னு ஒண்ணும் கட்டாயமில்லையே” படக்கென்று முறித்துச் சொன்னேன்.  பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டேன் என்றாலும் சொன்னதிலிருந்து பின்வாங்கவில்லை.

டுத்த வருடங்களில் தொழுகையை நடத்துவதற்குத் தகுதியாகும் வகையில் குர் ஆன் ஓதிமுடிக்கும்போது, ஒன்பதாம் வகுப்பே படிக்கும் சின்னப் பெண் என்பதால், ரெகுலராக இல்லையெனினும், யாரேனும் வராமல் போனால், சிலசமயம் என்னைத் தொழவைக்கச் சொல்வார்கள்.  (லீவ் வேகன்ஸி!!) அப்போ, முன்நின்று தொழவைக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே... 

ஒன்றிரண்டு வருடங்கள், இப்படி ‘டெம்ப்ரவரி போஸ்டில்” இருந்தேன். அடுத்த வருடம் பெர்மனண்ட் ஆக்கப்படலாம் என்றிருந்த நிலையில், தெருவுக்குள்ளே ஒரு பிரச்னையால் சண்டை வர, தெருவே ரெண்டு -  இல்லை மூன்றுபட்டு, சண்டை பெண்களையும் தொற்றி, பிரிந்து மூன்று இடங்களில் தொழ ஆரம்பித்துவிட்டார்கள்!! எங்கு செல்வது என்ற குழப்பத்தில் வீட்டிலேயே தனியே தொழுதுகொண்டேன். 

ள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும் இமாம் பொறுப்பு என்பது இலகுவானது அல்ல. அதற்கென இஸ்லாமியக் கல்வியும், பயிற்சியும் பெற்று, கடுமையான தேர்வுகளும் எதிர்கொள்ள வேண்டும்.

அன்றைய தராவீஹ் தொழுகையில், குர் ஆனின் “அர் ரஹ்மான்” என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார் இமாம். இறைவன் நமக்களித்துள்ளவற்றைப் பட்டியலிட்டு, “இறைவனின் இந்த அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள் நீங்கள்?” என்று வரிக்கு வரி கேட்கும் அத்தியாயம். கிராஅத்தில் மெய்மறந்து, எனக்கு மட்டுமே கேட்குமளவு மெல்லிய ஒலியில் அவரோடு சேர்ந்து ஓதினேன்.

தொழுகை முடிந்ததும் என்னருகில் நின்ற பெண்மணி, இமாமின் அழகிய கிராஅத்தை அவர் மனமொன்றி கேட்பதை, நான் வாய்விட்டு ஓதியது தடை செய்ததாகக் குறைபட்டுக்கொண்டார்.  மயிலைப் பார்த்து வான்கோழி ஆடியது போல இருந்திருக்குமோ? சல்மா எங்கிருந்தோ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

Post Comment

சுதந்திரம்




அதீதம் இணைய இதழில் வந்த எனது சிறுகதை
Date: Sunday, August 14th, 2011


வீட்டிற்குத் தோழி குடும்பத்தினர் விருந்துக்கு வந்திருந்தார்கள். வேலை அதிகம் என்பதால், உதவிக்கு ரம்ஜான்பீவியை வரச் சொல்லியிருந்தேன். தினமும் வீட்டு வேலைக்கு வருபவள் தான் என்றாலும், ஞாயிறு அவளுக்கு விடுமுறை. ஆனால், அன்று நான் அழைத்ததாலும், இதற்கு தனிச் சம்பளம் கிடைக்கும் என்பதாலும் வந்திருந்தாள் என்பதைவிட, அவளும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்கள் இருவருக்குமிடையில் உள்ள அந்நியோன்யத்தைக் கண்டு என்னிடம் ஆச்சர்யப்பட்ட தோழி, அவளிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். எத்தனைக் குழந்தைகள், கணவன் என்ன செய்கிறான் போன்ற வழக்கமான கேள்விகளைத் தொடுத்தாள். பின் ”நீ படிச்சிருக்கியா?” எனக்கேட்டாள்.

“எங்க? நாலோ, அஞ்சோ படிச்சுட்டு உம்மாவுக்குத் துணையா வூட்ல பீடி சுத்திகிட்டு இருந்தேன். மூணு நாலு வருசத்துக்குள்ளே, எங்க பெத்தும்மா (பாட்டி), அதுங்காலத்துக்குள்ள என் புள்ளயளப் பாக்கணும்னு சொல்லி, என்னக் கலியாணம் பண்ணிக் கொடுத்துடுச்சு. அதுக்கென்ன,  எம்மூத்தப்புள்ளயப் பாத்துட்டு அதுபோய்ச் சேந்துடுச்சு. அடுத்தடுத்து சின்ன வயசுலயே மூணு புள்ள பொறந்துடுச்சு; பெத்த மருந்து (பிரசவ லேகியம்) எதுவும் சாப்பிடவும் வழியில்லை. ஒழிச்ச இல்லாம வேலையாப் பாத்ததிலயும் என் உடம்பும் ரொம்பவே சுணங்கிப் போச்சு. எனக்கு இப்ப என்ன வயசுங்கிறீங்க? முப்பதுகூட ஆவலைன்னா நம்புவியளா?”

என் தோழிக்கு மட்டுமல்ல, இதுவரை அவளுக்கும் என்னைப் போல நாற்பது, நாற்பத்தைந்து இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கும் அதிர்ச்சியாயிருந்தது. பின்னர், என் தோழி, ரம்ஜான்பீவியின் பிள்ளைகளின் படிப்பைக் குறித்து கேட்டாள்.

“சிறுசு ரெண்டும் பள்ளிக்கோடம் போவுதுங்க. மூத்ததுக்கு பதினாலு, பதினஞ்சு வயசாவுது.  ஏழோ, எட்டோ வரை படிச்சுது. அதுக்கப்புறம் படிச்சது போதும்னு, வீட்டைப் பாத்துக்கச் சொல்லிட்டேன். அதுக்கும் படிக்க இஷ்டந்தான். ஆனா, நான் வேலைக்குன்னு ஒரே நாள்ல அஞ்சு வூடு போவுறதுனால, என் வூட்டுல ஒண்ணும் செய்யமுடியல தாயி. நான் வீட்டில உக்காந்துட்டு, வயசுப்புள்ளய வேலைக்கு அனுப்புனா ஆவுமா? அதா, அவள வீட்டைப் பாத்துக்கச் சொல்லி உக்காரவச்சிட்டேன்.”

“படிச்சுகிட்டே வேலை பாக்கச் சொல்லலாம்ல? படிக்கிற புள்ளைய இப்படி புடிச்சு வச்சிருக்கியே?”

“என்னத்த படிச்சாலும், அத கட்டிக் கொடுத்துத்தானே ஆவணும். படிச்ச புள்ளைன்னா, மாப்பிள அமையறது கஸ்டம். படிச்சா ரொம்ப ரூல்ஸ் பேசுதுங்கன்னு சொல்லி, இப்பலாம் படிக்காத புள்ளயத்தான் கேக்கிறாங்க. அப்படிப் படிச்சாலும், அதுக்கு வச்சிக்கொடுக்க ரூவா (வரதட்சணைப் பணம்) வேற நிறைய கேப்பாங்கம்மா. நான் எங்க போக அதுக்கு?”

“அதுக்காக இப்பவே கல்யாணமா?”

“அடப்போம்மா. இதுவே லேட்டுன்னு எஞ்சொக்காரங்கள்ளாம் என்னயத் திட்டுறாங்க. அவுங்க சொல்றதுக்காக இல்லன்னாலும், எனக்கும், எம்மாப்பிளைக்கும் தெம்பிருக்கும்போதே இதக் கட்டிக்குடுத்தாத்தானே, அடுத்ததுகளையும், காலாகாலத்துல கரையேத்த முடியும், சொல்லும்மா? அதுவுமில்லாம, நம்ம கடமையென்ன கல்யாணத்தோடவா முடியும்? அடுத்து அதுக்குப் பிள்ளைப்பேறு, அந்தப் பிள்ளையள வளக்கது, அப்படியிப்படினு அதுக வாழ்க்கயில நல்லதுகெட்டதுன்னு எல்லாத்துக்கும் பெத்தவுக நாங்களும் கூட இருந்தாத்தானே அதுகளுக்கும் ஆதரவா, தயிரியமா இருக்கும்? அப்பத்தான் எங்க காலத்துக்குப் பொறவு கூடப் பொறப்புகள் ஒண்ணாச் சேந்து ஒத்துமையா இருப்பாஹ.”

“இப்பத்தானே உனக்கு சின்ன வயசுலயே பிள்ளைகள் பிறந்ததால, உன் உடம்பு வீக்காயிடுச்சுன்னு சொன்ன? அதுக்குள்ள உம்பொண்ணுக்கும் அதையே செய்றியே?”

“வாஸ்தவந்தான். ஆனா, அந்தக் காலம் போல இல்லம்மா இப்பம். காலாகாலத்துல அதுகளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யலேன்னா, அதுக வழிதப்பி போயிடும்மா. நம்ம புள்ளைய நல்லா வளத்தாலும், வழிகெடுக்கதுக்குன்னே ஊருக்குள்ள நெறய பேரு இருக்காகம்மா. கல்யாணம் பண்ணிட்டுப் பெர்ற புள்ளையையே இங்க பாதி தகப்பங்காரன் வுட்டுட்டு போயிடுறான். பிரச்னையேதும் வந்தா, ஊர்க்காரவுகள வச்சு பேசி எதாவது வாங்கிக்கணும்னா, நிக்காபுஸ்தவம் இருக்கணும்ல? கல்யாணத்துக்குமின்ன தப்புதண்டா ஆகிடுச்சுன்னா, யாரும்மா அதுல கிடந்து முழிக்கது?”

பதிலில்லாமல் நின்றோம்.

ணவரின் அலுவலகத்தில் பார்ட்டி. கம்பெனியின் வெளிநாட்டுத் தலைமையகத்திலிருந்து ஆங்கிலேயே உயர் அலுவலர்கள் வந்திருப்பதால், ஒரு ஃபேமிலி கெட்-டுகெதர். ஓரிரு வெளிநாட்டு அலுவலர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்களின் மனைவியரோடு நானும், இன்னும் சில பெண்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மனைவியர் என்று நாங்கள் சொன்னாலும், அவர்கள் தங்களை “லைஃப்-பார்ட்னர்” அல்லது “கேர்ள்/பாய்-ஃப்ரண்ட்” என்றே சொல்லிக் கொண்டனர்.

பல விஷயங்கள் பேசினாலும், எங்கள் எல்லாரையும் கவர்ந்தது அப்பெண்களின் ‘ஃபிட்னஸ்’தான். அங்கே சுத்தி, இங்கே சுத்தி, பேச்சு அதில் வந்து நின்றது. ஒருவேளை இன்னும் குழந்தை பெறவில்லையோ என்று நாங்கள் நினைத்ததற்கு மாறாய், ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள். அதிலும் எங்களை அதிகம் கவர்ந்த மேபெல் என்ற பெண்ணுக்கு 15 வயதில் மகள் இருக்கிறாளாம்.

நாங்கள் ஆச்சரியமாக வாய் பிளப்பதைப் பார்த்த மேபேல், இன்னொரு அதிர்ச்சித் தகவலைத் தந்தார். அவருக்கு 30வயதுதானாம். 30 வயசுல 15 வயசுப் பொண்ணுன்னா, அப்ப... என்றாலும், நாகரீகம் கருதி பேச்சை வேறுபக்கம் திருப்பினோம். என்னென்னவோ பேசி, பேச்சு திருமணத்தில் வந்து நின்றது.

இந்தியர்கள் படித்து முடித்து, வேலை கிடைத்த பின்பே, அதுவும் பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்வதும், அதன் பின்பே குழந்தைகள் பெறுவதும் அவர்களுக்குப் பெருத்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. "ஏன் வாழ்க்கையை அனுபவிப்பதை அவ்வளவு தூரம் தள்ளிப் போட வேண்டும்? நாங்களெல்லாம் படிக்கும் போதே சுதந்திரமாகவும், எங்களின் வாழ்க்கையை நாங்களே தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறோம்.”

எங்களின் மௌனத்தைத் தொடர்ந்து அவரே பேசினார், “ஆமாம், எனக்கு முதல் குழந்தை பிறக்கும்போது 15 வயசுதான். ஆசையாகப்  பெற்றுக்கொண்டோம். பிறகு சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். இருவரும் தனியே படித்து, வேலைத் தேடிக் கொண்டோம். இன்னொரு விஷயம் தெரியுமா? தாயைப் போல பிள்ளை என்று என் மகளும் நிரூபிக்கிறாள். ஆமாம், அவளுக்கும் இரண்டுமாதம் முன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அவளும், அவளின் பாய்-ஃப்ரெண்டும் தற்போது ஒன்றாகத்தான் இருக்கின்றனர். குழந்தையை டே-கேர் செண்டரில் விட்டுவிட்டு, இருவரும்  படிப்பைத் தொடர்ந்துகொண்டே, பகுதிநேர வேலையும் பார்க்கின்றனர். இருவரும் தம் கால்களில் நிற்கின்றனர். அவர்களின் செலவையும், குழந்தையின் செலவையும் அவர்களே சமாளித்தாக வேண்டுமே?” .

ரம்ஜான்பீவி என் மனக்கண்ணில் வந்தாள்.

Post Comment

விருந்தாடல்





கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு புதுமணத் தம்பதியரைப் பார்க்கப் போயிருந்தேன். தனக்கு இன்னும் சுவையாக டீ போடும் பக்குவம் கைவரவில்லை என்று வருத்தப்பட்டார் அந்தப் பெண். சரினு நானே போட்டு (demo) சொல்லிக் கொடுத்தேன். ரொம்ப நல்லாருக்குனு ரசிச்சுக் குடிச்சுட்டுச் சொன்னார், ’உங்களுக்குச் சமைக்கிறதுல நிறைய எக்ஸ்பீரியன்ஸ், அதான் இவ்வளவு ஈஸியா நல்லா டீ போடுறீங்க, இல்லையா?’னு அப்பாவியாக் கேட்டார். நான் சொன்னேன், “அப்படியில்லை. 15 வருஷமாச் சமைக்கிறவங்கிறதால, நான் சமைச்சா நல்லாருக்கும்னு (புதுசாச்) சாப்பிடுறவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னோட பலம். எப்படி சமைச்சாலும், டேஸ்டாருக்குன்னு சாப்பிடுக்கிடுவாங்க. பெரிய பெரிய படிப்பு படிச்சிருந்தாலும், புதுசா படிச்சுமுடிச்ச டாக்டரவிட, ஆயிரம் பேரக் கொன்னாத்தான்  அரை வைத்தியன்னு, கொஞ்சம் அனுபவமுள்ள டாக்டர்கிட்டதானே வைத்தியம் பாக்க விரும்புவோம்? !!”

14 வருஷம் முன்னே, ஒரு கையில ஆறுமாசப் பிள்ளையும், இன்னொரு கையில என் மைனி (அவங்க தம்பி நலனைக் கருதி) எழுதித் தந்த சமையல் குறிப்புகளுமா அபுதாபி வந்து இறங்கினப்போ நானும் இந்த நிலைமையிலத்தான் இருந்தேன். அதுவும் அப்பல்லாம், அபுதாபியில குடும்பத்தோட இருக்கவங்க ரொம்ப ரொம்ப அரிது. ஒரு சந்தேகம் கேக்கணும்னாகூட, ஊருக்கு ஃபோன் பண்ணி அம்மாகிட்டத்தான் கேக்கணும். இலவச இணைப்பா, ”கூடமாட நின்னு வேல செஞ்சாத்தானே”ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டும்  பாடித் தருவாங்க எங்கம்மா!! இப்பப் போல இணையமோ, சமையல் தளங்களோ கிடையாதே. எல்லா டிவி சேனல்களிலும் வர்ற சமையல் நிகழ்ச்சிகளை (மட்டும்) ஒண்ணுவிடாமப் பார்ப்பேன் - மறு ஒளிபரப்பா இருந்தாலும்!!

நான் அமீரகம் வந்தப்போ, ஒவ்வொரு வார இறுதியிலயும் குறைஞ்சது 10-15 பேரு விருந்தினர்கள் வருவாங்க - எல்லாரும் பேச்சிலர்ஸ்தான். ரெண்டுபேருக்குச் சமைக்கவே திண்டாடிகிட்டிருக்கும்போது, 15 பேர்னா.. அழுகை அழுகையா வரும்...  இப்பப் போல ஹோட்டல்களோ, “ஃப்ரீ ஹோம் டெலிவரி”யோ கிடையாது. ஆனாலும் சமாளிச்சு நான் செஞ்ச சாப்பாடு, பெரும்பாலும் எனக்கே ஒண்ணும் மிஞ்சாது. அவ்வளவு ருசியான்னு சந்தேகம் வந்தாலும், ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கர’யும் ஞாபகம் வரும்.  இன்னொரு உண்மையும் சொல்லணும், சரியான அளவு தெரியாம குறைச்சுச் சமைச்சிருப்பேன். ரெகுலரா வர்ற சில (சமைக்கத் தெரிஞ்ச) பேச்சிலர்ஸ், எனக்கு நிறைய டிப்ஸ் சொல்லித் தந்தாங்க. இப்படித்தான் சமையல் வளர்த்தேன்.

அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சு நிறைய குடும்பங்கள் அமீரகத்துக்கு வர ஆரம்பிச்சுது.  சந்தேகம் கேக்க, வேற யாராவது சமைச்சதைச் சாப்பிட, புது ரெஸிப்பிகள் கேக்கன்னு வாய்ப்புகள் அமைஞ்சுது. ஆனா ரொம்பவே நடுக்கம் தந்த விஷயம், யாராவது குடும்பத்தோட விருந்துக்கு வர்றாங்கன்னு சொன்னாத்தான். பின்ன, பேச்சிலர்ஸ்னா என்னத்த போட்டாலும், அவங்க சாப்பிடுற ஹோட்டல்/மெஸ் சாப்பாட்டுக்கு இது அமிர்தம்னு சாப்பிட்டுகிடுவாங்க. ஆனா, சமையல்ல எக்ஸ்பர்ட் ஆன சீனியர் பெண்கள் வரும்போதுதான் தர்மசங்கடமாயிருக்கும். சிலர், பெருந்தன்மையா சாப்பிட்டு, நம்மை என்கரேஜ் பண்ணி, நிறைய டிப்ஸ்கள் தருவாங்க. இவங்க வந்தாலே சந்தோஷமாருக்கும்.

ஒருசிலர் இருக்காங்க, நாம செஞ்சு வச்சிருக்க மெனுவைப் பாத்துட்டு, “அய்ய, சப்பாத்திக்கு வெஜ் குருமாவா? எங்க வீட்டுக்காரர் தொடவே மாட்டார். மட்டன் முழம்புதான் வேணும்பார்”, “என் பொண்ணுக்கு சப்பாத்தியே பிடிக்காது. பரோட்டாதான் பிடிக்கும்” “குருமால கரம் மசாலா போடலையா, வாசனையே இல்லியே”னு என்னென்னவோ சொல்லுவாங்க.  அப்பல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாதா, (நிஜம்ம்மாங்க) அதனால கண்ணுல தண்ணி முட்ட, அவங்க சொல்றதக் கேட்டுகிட்டு சும்மா நிப்பேன்!! அப்புறம் கொஞ்ச கொஞ்சமாத் தேறி,  யாராவது அப்படி சொன்னாங்கன்னா, “வழக்கமா மட்டன்தானே சாப்பிடுறீங்க, இன்னிக்கு வெஜ் குருமா சாப்பிட்டுப் பாருங்க. இனி மட்டன் பக்கமே போகமாட்டீங்க. உடம்பும் குறையும்”, “சப்பாத்தி நீங்க செய்ற மாதிரி இருக்காது. அதனால உங்க பொண்ணு கண்டிப்பா விரும்பி சாப்பிடுவா பாருங்க” அப்படின்னு ஒரு “உள்குத்தோட” பதில் சொல்லிடுவோம்ல!!

விருந்துக்குப் போனா, வழக்கமா வீட்டில சாப்பிடறதா இல்லாம, வித்தியாசமா வகைகளையும், டேஸ்டையும் சாப்பிடணும், செய்முறை கேக்கணும்னுதான் நிறைய பேரு விரும்புவோம் - என்னைப் போல. அப்படியில்லாம, வீட்டில சாப்பிடுற அதே வெரைட்டிதான் விருந்துக்கும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறவங்களப் பாத்தா எனக்கு ஆச்சரியமாவும், கடுப்பாவும் இருக்கும். எங்க பக்கம் ஒருத்தங்க இருக்காங்க, அவங்க வர்றாங்கன்னா ஃப்ரைட் ரைஸும், சில்லி சிக்கனும்தான் செய்யணும். இது அவங்க வீட்டிலயும் அடிக்கடி செய்றதுதான். கொஞ்ச நாள் ’கட்டுப்பட்டு’ செஞ்சேன்,  இப்ப எனக்கே அலுத்துப் போயி வேற எதாவது செஞ்சிடுவேன்.

அதே சமயம், சிலருக்கு சில உணவு ஒத்துக்காது. அதக் கேட்டுத் தெரிஞ்சுகிடறது அவசியம்தான். பிபி, சுகர் இப்பவெல்லாம் ரொம்ப சகஜமாகிட்டது. அதனால, அதுக்கேத்தமாதிரி மாற்று உணவும் வச்சிருக்கணும். அப்படிப்பட்டவங்க சிரமம் பாக்காம, விருந்து சமைக்கறவங்ககிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறது நல்லது. அப்புறம், “எனக்கு பிபி இருக்குனு தெரிஞ்சே, பிரியாணியும் சிக்கன் ஃப்ரையும் செஞ்சு வச்சிருந்தா”னு குத்தம் மட்டும் சொல்லக் கூடாது!! ஒரு உறவினர், இப்படித்தான் ஹை பிபி, வீட்டில உணவுக் கட்டுப்பாடு இருந்துதுன்னு, கல்யாண வீடு வந்தா முத ஆளா போயிடுவாங்க. அப்புறம், வாதம் வந்து, படுக்கையில கஷ்டப்பட்டு.. எதுக்கு அதெல்லாம்..

என் வாப்பாவோட சிறுவயது நண்பர் ஒருவர், அவரே எழுதின கவிதை(!!) ஒண்ணை அடிக்கடி சொல்வார்:
               பருப்புன்னா வெறுப்பு
              பொறியல்னா மறியல்
              சட்டினின்னா பட்டினி
              கறின்னாதான் சரி!!
சில சமயம் கரெக்டா (உரிமையா) சாப்பாட்டுவேளையில் என் பாட்டி வீட்டிற்கு வந்தாலே புரிந்துவிடும்!! :-)))))

இன்னொரு கஷ்டம், எத்தனை பேரு வர்றாங்கன்னு தெரிஞ்சுக்கிறது. சில சமயம், சிலர் நண்பர்களையோ, குடும்பத்தையோ உடன் அழைச்சுகிட்டு வருவாங்க. நேரா கேக்கவும் தயக்கமாருக்கும். சிலர், அப்படிக் கேக்கறதையே குத்தமா எடுத்துக்குவாங்க!! எத்தினி பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சுப் போடத் தெரியணுமாம்ல குடும்பப் பொண்ணுக்கு?! பல சமயம், அளவு தெரியாம நிறைய சமைச்சு, மிஞ்சுனத ரெண்டு நாள் சாப்பிட்டு, அப்புறமும் காலியாகாம, மனசில்லாம தூரப் போட வேண்டிய நிலையும் (ராப்பிச்சை கிடையாதே இங்கே) வந்ததுண்டு. அதுக்குப் பயந்து, நாலு பேர் வருவாங்கன்னு அளவாச் சமைச்சா, எட்டு பேர் வந்து நிப்பாங்க!! இப்பல்லாம் இதுக்கொரு வழி கண்டுபிடிச்சுட்டேன்.. வரமுன்னாடி விருந்தாளிக்கு ஃபோன் பண்ணி, “எல்லாரும் கண்டிப்பா வரணும். அத்தை, மாமா, சித்தி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”னு மனசார  அழைச்சா, அவங்க மனசும் குளிரும்; “இல்லைம்மா, மாமாவுக்கு கால் வலி. அதனால வரமுடியாது. அத்தை அவங்க துணைக்கிருப்பாங்க. நானும், மச்சானும், பிள்ளைகளும் மட்டும் வர்றோம்”னு துல்லியமா சமைக்கிறதுக்கு அளவும் தெரிஞ்சிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!!

என் தோழியின் மாமியார், திடீர்விருந்தினர்களுக்காகன்னு தினமும் சமைக்கும்போது இரண்டு கப் அரிசி சேர்த்துத்தான் சமைப்பாராம். அவர்கள் இருப்பது நகரத்தில் என்பதால், விருந்தினர்கள் அவ்வப்போது வருவதுண்டு என்றாலும், தினமும் வருவதில்லை. அரிசி விலை கிலோ முப்பத்தாறு ரூபாய். இதிலே தினமும் அதிகமா சமைத்து பழையது சாப்பிடவோ அல்லது வேலையாளுக்குக் கொடுப்பதோ ஏன்? அருகிலே நிறைய உணவகங்கள் உண்டு. அதுவுமில்லாமல், பழைய காலம் போலல்லாமல், இப்போ அலைபேசி வசதி இருப்பதால், தெரிவிக்காமல் யாரும் வருவதில்லை எனும்போது பணமும், உணவும் ஒருசேர வீணாக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியதில், மாமியார் புரிந்துகொண்டார்.

உண்மைதானே? ஹோட்டல்களும், வேகத்தகவல்தொடர்பு முறைகளும் இல்லாத அக்காலங்களில் விருந்தோம்பல் என்று காரணம் சொல்லி, ஒருபடி அரிசி அதிகமாகவே சமைப்பார்கள். அப்படி யாரும் வரவில்லையென்றாலும், அந்த உணவு வீணாகாதபடிக்கு, இரவிலும் சாதம் உண்ணும் பழக்கமோ, அல்லது பணியாளர்கள், உறவினர்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். இப்போவெல்லாம் மாலையில் டிஃபன்தான் பெரும்பாலான வீடுகளில். பணியாளர்களும் சரி, இரப்பவர்களும் சரி, மீந்த சாதம் பெற விரும்புவதில்லை.  கால மாற்றத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இன்னும் சிலர், சும்மா அவங்க வீட்டுக்கு நட்புரீதியில் (அறிவிக்காமல்) பார்க்கப் போனாக்கூட, சாப்பிட்டுட்டுத்தான் போணும்னு அடம்பிடிப்பாங்க. வீட்டில் அதற்கான பொருட்கள் இருக்கிறதா, கைக்குழந்தை வைத்திருக்கும் மனைவிக்குச் சமைக்க வசதிப்படுமா, உடல்நலக்குறைவு இருக்கிறதா என்று எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்குமேலே செல்ல மிரட்டலும் விடுப்பார்கள், “எங்கவீட்ல சாப்பிடாட்டி, உங்க வீட்லயும் நாங்க சாப்பிடமாட்டோம்” - சின்னப் பிள்ளைகள் ‘உன் பேச்சு கா’ என்பதுபோல..

இன்னும் சிலரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே பயமாருக்கும். எக்கச்சக்க வகைகளில் உணவு செய்து/வாங்கி வைத்துக் கொண்டு, எல்லாத்தையும் சாப்பிட்டே ஆகணும்னு அன்புத் தொல்லை செய்வாங்க. ஒருசாண் வயித்துல எவ்வளவுதான் திணிக்க முடியும்? வேண்டாம்னு மறுத்தா, ‘பந்தா’ பண்றோம்னு நினைக்கிறாங்க. அப்படித்தான் ஒரு நண்பர் வீட்டில், கட்டாயப்படுத்த, ‘வேணும்னா பார்சல் கொடுத்திடுங்க. ரெண்டு வேளை உங்க பேரைச் சொல்லிச் சாப்பிட்டுக்கிறேன். ஆனா, இப்ப என் வயித்துல துளிகூட இடமில்லை”னு கெஞ்ச வேண்டிய நிலைமையாகிடுச்சு.

அதேபோல, விருந்துக்கு வர்றவங்களையும் இப்படிக் கட்டாயப்படுத்தணும்னு சிலர் எதிர்பார்ப்பாங்க.. எனக்கு நிஜமாவே அதல்லாம் வரமாட்டேங்குது. எப்படி நான் விருந்தினராகப் போகும்போது, எனக்குப் பாசாங்கு பண்ணத் தெரியாதோ, அதேபோல, வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். எனக்கு அப்படிக் கட்டாயப்படுத்தத் தெரில.. இதுக்கும் ஒருத்தர் இருக்கார், இடியாப்பம் (அல்லது வேற எதாவது) வைக்கட்டுமா என்று கேட்டால், ‘ஒண்ணே ஒண்ணு வை’ என்று சொல்லிக் கொண்டே ‘முன்று விரல்’ காட்டுவார்!!

இப்ப நோன்பு நேரம்கிறதால, ‘இஃப்தார்’ விருந்துகள் களைகட்டும் காலம்!! (’இஃப்தார்’ விருந்துன்னா, நோன்பு திறக்கும் விருந்து - அரசியல்வாதிகள் நோன்பு கஞ்சி குடித்தார்கள்னு செய்திகள்ல படிச்சிருப்போமே - அதுபோல!!) மற்ற நேரங்களிலாவது கொஞ்சம் அதிகப்படியா சாப்பிட முயற்சிக்கலாம். ஆனா, நோன்பு நேரத்துல  அப்படி முடியாது. பசிச்சிருந்த வயிறைக் கவனமாப் பாத்துத்தான் உணவு கொடுக்கணும். ஒரேடியாத் திணிச்சா, மக்கர் பண்ணிடும் - வயிறு மட்டுமில்லை, முழு உடம்பும்!!  நோன்பினால் உண்டாகக்கூடிய உடல் சூட்டையும், வாய்வையும் குறைக்கக் குடிக்கும் நோன்புக் கஞ்சியைக் கூட சிலர் கறி போட்டு, பிரியாணி ரேஞ்சுக்குச் செஞ்சிருப்பாங்க!! அதுமட்டுமில்லை, பொறித்த அயிட்டங்களும் கணக்கில்லாம சேத்துப்பாங்க சிலர்.  இறைவனுக்காகப் பசித்திருக்கிறோம். அதேசமயம், இறைவன் தந்த உணவையும், உடலையும் வீணாக்காமல் பராமரிக்க வேண்டியதும் நம் கடமைதானே.

மற்ற சமயங்களில் வீணாகும் உணவு அளவைவிட, நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீணாக்கும் உணவு அதிகமோன்னு தோணுது. இதுக்கு எச்சரிக்கை தர, சோமாலியாவைப் பாருங்கன்னு சொல்ல மாட்டேன். நம்ம அண்டை, அயல்களைப் பார்த்தாலே போதும்!! பசியைக் கட்டுப்படுத்த நாம் பெறும் பயிற்சி, சரிவிகித உணவை அளவோடு உண்பதிலும் இருக்க வேண்டும். உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும். அளவோடு சமைத்து, அளவோடு உண்டு, அவசியமானவர்களுக்குப் பகிர்வோம்.

Post Comment

ஸ்கைப் அம்மா






www.ithacalibrary.com

ஸ்கைப்பில் வந்தாள் அம்மா
ஸ்கைப்பினால் நன்மை பல
தினமும் அம்மாவைப்
பார்க்கலாம் பேசலாம்
சமையல் குறிப்பு
வீட்டு மருத்துவம்
கூடவே அன்பும்
இன்ஸ்டண்ட்டாய்க் கிடைக்கும்

எழுதப் படிக்கவும் அறியா
அம்மா இப்போ
கணினி ஆன்செய்து
ஸ்கைப்பில் தானே
லாகின் ஆகுமளவு
மேதை!!

பாட்டியைப் பார்த்து
பேத்தி ஓடிவந்தாள்
அரிசி காய்கறிகள்
சூப்பர்மார்க்கெட்டில்
விளைகிறது
பால் கொடுப்பது
பாக்கெட் ஃபாக்டரி
போலவே
தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்

சேமநலம் விசாரித்து
இன்றைய சமையல் கேட்டு
கூடுதல் டிப்ஸ் சொல்லி
உற்றார்கள் நலசேதி
கல்யாணம் விவாகரத்து விவரம்கூறி
பின் அம்மா கேட்டாள்

உன் ஓர்ப்படியா அப்பா
கீழே விழுந்து இப்போ
எல்லாம் படுக்கையிலயாமே
வயசுபோன காலத்துல
அவ அம்மாதான்
பாத்துக்கறாளாம்
ஒத்தாசைக்கு
ஒருத்தரும் இல்லையே

அங்க இருக்க
உன் ஓர்ப்படியாகிட்ட
ஒரு எட்டு வந்துபாத்துட்டுப்
போகச் சொல்லக்கூடாதா


பரீட்சைநேரம்
பள்ளிக்கூடம் போறப் பசங்களை
லீவும்போடச் சொல்ல முடியாது
விட்டுட்டும் வர முடியாது
வீட்டுக்காரரும் டூர் போவார்
அதான் வரமுடியல
நாளை எனக்கும் தேவைப்படுமோவென
காரணங்களைச் சேர்த்து
எங்கோபார்த்து நான் சொல்ல

நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்


Post Comment

விட்டுவிடலாமா?






இந்த வருடத்தின் நோன்புக்கான ரமலான் மாதம் ஆரம்பித்து, இதோ நான்கு நோன்புகள் ஆகிவிட்டது. 


இஸ்லாமியக் கடமைகளான ஸகாத்(தானம்) மற்றும் ஹஜ் பயணம் ஆகியவை, அதற்கான வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கடமையாக இஸ்லாம் கூறுகிறது. இதுவரை,  மறுமைக்கான பலன்களோடு, நோன்பு நோற்பது பசியின் தாக்கத்தை உணர்ந்து, அடுத்தக் கடமையான ஸகாத்தைச் சிறப்புற நிறைவேற்றவும் ஊக்கமளிக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனா, நோன்புங்கிறது ஸகாத் செலுத்துறவங்களுக்கு மட்டும் கடமையில்லையே? ஐவேளைத் தொழுகையைப் போல, இதுவும் ஆண்-பெண், ஏழை-பணக்காரர் பேதமில்லாமல் எல்லாருக்குமேதானே.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

நோன்பு, நம்மை தூய்மையடையச் செய்யும் வணக்கச் செயல் என இறைவன் திருமறையில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்.....  அறிவிப்பாளர்: முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா (ரழி) நூல் அஹ்மத், முஸ்லிம்,   திர்மிதி

நம் எல்லாச் செயல்களின் விளைவுகளும் நமக்கே என்று சொல்லும் இறைவன், நோன்பை மட்டும் தனக்கானது என்று சொல்லுவதிலிருந்தே நோன்பின் மாண்பை உணரலாம். இன்னும்,

ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்கக்கூடியதாகும். ஒரு ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமலானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். ஆதாரம்: முஸ்லிம்

பொதுவாவே ‘பசி வந்தா, பத்தும் பறக்கும்’னு சொல்லுமளவு பசிதான் மிகவும் கொடுமையான விஷயமா உலகத்தில் சொல்லப்படுவது. ’தானத்தில் சிறந்தது அன்னதானம்’னு பசிக்கு உணவளிப்பதைச் சிறப்பித்திருப்பதிலிருந்தும் பசியின் பாதிப்பு எப்படிப்பட்டதுன்னு புரியும். இன்னும், ‘எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’,  'சோறுகண்ட இடம் சொர்க்கம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’, "If you want to enter into a man's heart, enter through his stomach' -  இப்படி வழங்கப்படும் பல சொல்லாடல்கள் உணவின் அத்தியாவசியத்தைச் சொல்லும்.
ஆனா, நோன்பு சமயத்தில், உணவு நம்முன்னே இருந்தாலும், நம்மருகில் யாரும் இல்லைன்னாலும், இறைவனுக்காக, மிகுந்த மனக் கட்டுப்பாட்டோடு, உண்ணாமல், தண்ணீர்கூட நாவில் படாமல் இருக்கிறோம். இப்படியொரு  சுய கட்டுப்பாட்டைக் கொண்டு (self-control) நம்மை மேலும் உறுதிபடுத்திக் தருவது இந்த ஒரு மாத ஆன்மீகப் பயிற்சிதான்.

வருஷத்துக்கொரு முறை வரும் பரீட்சைபோல வரும் இந்த நோன்புகாலத்தில் நம் புலன்களை அடக்கி, வெற்றி பெறுவது, அடுத்த நோன்புகாலம் வரை நம்மைப் பண்படுத்திக் கொள்வதற்கான ஒரு “rigorous training" போல!! ஆனானப்பட்ட பசியையே அடக்கியாண்டுட்டா, மத்த உணர்வுகள் எம்மாத்திரம்? பசியைக் காரணம் காட்டித்தானே இந்த உலகத்துல பல தவறுகள் நடக்குது அல்லது நடத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ‘ஒரு மாதப் பயிற்சி முகாம்’ உதவுகிறது.

மேலும், நோன்பு காலத்தில், உணவில் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதனால, எப்பேர்ப்பட்டவரும், இந்த ஒரு மாசம் மட்டுமாவது ’திருந்தி’யே ஆகணும். உதாரணமா, சிகரெட், பொய் பேசுதல், கோபம் கொள்ளுதல், தீய எண்ணங்கள் - எல்லாமே புனித மாதமாக முன்னிறுத்தப்படும் இந்த மாதத்தில் கண்டிப்பாகத் தவிர்க்கப் படவேண்டி இருப்பதனால், மற்ற காலங்களிலும் அவற்றை முழுமையாகத் தவிர்க்கவும் நோன்பு காலத்தில் பயிற்சி கிடைக்கிறது.

ஆக, நோன்பு மாதம் என்பது, இறைவன் கட்டளைப்படி நோன்பிருந்து மறுமைக்கான நன்மைகள் பெற்றுத்தரும் பயிற்சிக் களமாய் மட்டுமல்லாமல், பசியை மட்டுமல்லாது, ஒருவரின் எல்லா உணர்வுகளையும்   கட்டுப்படுத்தும் திறனை அதிகரிக்கச் செய்து, இவ்வுலக வாழ்வையும் நேர்வழியில் வாழ இறைவன் தந்த அருட்கொடையாகவும் காண்கிறேன்.

நோன்பாளிகளுக்குப் பல சிறப்புகளை மறுமையில் வாக்களித்திருக்கும் இறைவன், இம்மையில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகளையும் மறுக்காமல் நிறைவேற்றித் தருவதாக நபிமொழி கூறுகிறது.  விட்டுவிடலாமா இந்த அழகிய சந்தர்ப்பத்தை?

Ref: http://www.ottrumai.net/TArticles/10-FastingIsObligation.htm

Post Comment