Pages

ஆடையில்லா மனிதன்...




பிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம்!! விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .
 
முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா?
 
நாம் ஏன் ஆடை அணிகிறோம்? நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.
 
ஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா?
 
குர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும்? எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன?
 
2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....
 
உலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்!!!
 
 
 
டையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும்.  தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.  ஆனால், ஆடை..?  எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;
 
ஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில்? கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.
 
உடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.
 
கடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.
 
டைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப்  பேணும் முறையும் அமைகிறது.  ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.
 
ஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.
 
விசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து  அணிந்து அழகுபார்க்கிறோம்.
 
தற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!
 
மானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள்.  மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல!
 
முன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ? நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா?
 
அன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா?
 
றைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.
 
”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.
 
சுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும். 
 
இஸ்லாமிய பெண்மணி” வலைத்தளத்தில் 13-2-2016 அன்று வெளியான கட்டுரை.

Post Comment

ஜீவனாம்சம்




மீபத்தில் விவாகரத்தான ஒரு நண்பரையும், அவரது தாயாரையும் சந்திக்க நேர்ந்தது. நண்பர் மிகவும் வாடிப் போய் இருக்க, தாயாரோ புலம்பித் தள்ளி விட்டார்கள். விஷயம் இதுதான்: தலாக் சொல்லியபோது, இரு குடும்பத்தார்களுக்கும் பொதுவாகப் பேசி காரியங்களைச் சுமுகமாக்கி வைத்த ஊர் ஜமாத்தார்கள் பெண் தரப்பிற்கு அதிக நஷ்ட ஈட்டை வாங்கித் தந்துவிட்டார்களாம். “எனது இத்தனை வருடகால உழைப்பும் இதற்கே சரியாகிவிட்டது. இனி எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வருந்தினார் நண்பர். பரிதாபமாக இருந்தது.

”இஸ்லாத்தில் இந்த நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் எதுவும் கிடையாது. ஆனா, பொம்பளைன்னா இரக்கம் காட்டணும்னு சொல்லிகிட்டு இஸ்லாத்துக்கு மாறா நடக்குறாங்கம்மா… உன்னை மாதிரி பெண்ணுரிமை பேசுற ஆட்கள் இதையும் சரின்னு சொல்வீங்களே…” என்று என்னையும் தாக்கினார்!!

அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “விவாகரத்து இஸ்லாமிய முறைப்படி நடக்கலை, சரி. கல்யாணம் இஸ்லாமிய முறைப்படிதான் நடத்துனீங்களா?”

ஸ்லாம் அதிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த காலகட்டத்திலும், திருமணம் என்பது இன்னும் பெண் வீட்டாருக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருக்கிறது.

மகளுக்கு நகைகள், பட்டாடைகள், பாத்திர பண்டங்கள், கட்டில், பீரோ மற்றும் வாஷிங் மெஷின் – ஃப்ரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள், மாப்பிளைக்கு பைக்-வாட்ச்-செயின், மாமியார் நாத்தனார்களுக்கும் நகைகள் இவைபோக, மப்பிள்ளை வீட்டார் போக்குவரவு – தங்குவதற்கான செலவுகள், திருமண மண்டபச் செலவுகள், பல வித விருந்து செலவுகள், சீர்கள் என்று மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு செலவுகள் திருமணத்தின்போது!!

இத்தோடு முடிந்ததா? வருடா வருடம் நோன்புச் சீர், பெருநாள் சீர்கள்; தவிர குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் செலவும் பெண்வீட்டாருடையதே. பிறந்த குழந்தைக்கு நகைகள், விருந்துகள், இன்ன பிற செலவுகள்.

இங்கு சொல்லியிருப்பவையெல்லாம் குறைந்த பட்சம்தான். ஊருக்கு ஊர் வசதிக்கேற்றவாறு இன்னும் கூடுதலாகவே உண்டு.

ப்படி, ஒரு மகளுக்கே தந்தை தன் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கிறது!! இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், தந்தையின் நிலை பரிதாபம்தான்!!

இதுவா இஸ்லாம் சொல்லும் திருமண முறை? கேட்டால் மாப்பிளை தரப்பில் சொல்லுவார்கள், “நாங்களும்தான் மஹர் நகை போடுறோம். வலீமா விருந்து வைக்கிறோம்”. சிரிப்பு வருகிறதா, சிரித்து விடுங்கள்.

3 முதல் 10 பவுன் நகையை மஹர் என்ற பெயரில் போடுகிறார்கள். அந்த நகை கணவன் அல்லது அவர் வீட்டார் சுய விருப்பத்தின் பேரில் மனைவிக்கு அளிப்பது. மஹர் என்றால் என்ன? பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா? அல்லது பெண் விருப்பத்தைக் கேட்டுச் செய்யும் நிலைதான் இங்கு நிலவுகிறதா என்ன?

திருமணத்தன்று, மணமகளின் தந்தை செலவில் இரு தரப்பிலுமாக குறைந்த பட்சம் ஆயிரம் ரெண்டாயிரம் பேர்கள் விருந்துண்டபின், மணமகன் தன் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும் சிறிய அளவிலான விருந்தை வலீமா என்று சொல்லிக் கொள்கிறார்கள்!!

ரபுநாடுகளில், அரசுகள் ஆணின் திருமண செலவுக்கு நிதியுதவி செய்வதற்கென மையங்கள் வைத்து இருக்கின்றன. நம் நாட்டிலோ, அரசுகள் மதபேதமின்றி பெண்ணின் தாலிக்கு தங்கமும், சீருக்கு பணமும் தருகின்றன. வங்கிகளும் “மகள்களின் திருமணத்திற்கு” என பல திட்டங்கள் வைத்திருக்கின்றன!!

இப்படி சேமிப்பு அனைத்தையும் கரைத்து, கடனுக்கு மேல் கடனும் வாங்கி திருமணம் செய்து வைத்த மகள், ஒருவேளை மணவாழ்க்கை தோல்வியுற்று திரும்பி வந்தால், பின்னர் அவள் நிலை என்ன? அவளும் அவள் குழந்தைகளும் தந்தை வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவளுக்கு அடுத்து ஒரு திருமணம் என்பதெல்லாம் நம் நாட்டில் கனவுதான்.

விவாகரத்தான அல்லது விதவையான பெண் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன? “தலாக் என்றால், கொடுக்கப்பட்ட மஹர் திரும்பி வாங்கப்படக்கூடாது. குழந்தைகளின் (இருப்பின்) எல்லாவித செலவும் அக்குழந்தைகளின் தந்தையுடையதே”.

துணையை இழந்தாலும், பிரிந்தாலும், அவர்கள் உரிய காலத்தில் உடன் மறுமணம் செய்துகொள்ளுதல் வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமான பொதுவிதி. இதற்கு வயது ஒரு தடையே கிடையாது. “திருமணம் ஈமானில் பாதி” என்ற ஹதீஸ் முதல் திருமணத்திற்கானது மட்டுமல்ல. முஸ்லிம் ஆணும், பெண்ணும் இறுதி வரை ஒரு திருமண பந்தத்தில் இருக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய கட்டளை.

தனால்தான் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருவனின் பணத்தை எதிர்பார்த்து வாழும் அவலநிலையை விட்டும் பெண் பாதுகாக்கப்பட்டு, அதே சமயம், எந்நாளும் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் உயர்வு கொடுக்கப்பட்டுள்ளாள். ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரு முறை திருமண பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த திருமணம் என்பது எந்தளவு சாத்தியம் என்பதை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
அதுவும் குழந்தைகள் உடைய பெண் என்றால், கேட்கவே வேண்டாம். 
 
குழந்தைகள் தாயின் மறுமணம் வரை மட்டுமே தாயுடன் இருக்க வேண்டும், மறுமணம் செய்யாத பட்சத்தில் 7 வயது வரை இருக்கலாம். அதன் பின், குழந்தைகளின் விருப்பம் மற்றும் நலனைப் பொறுத்து தாயுடனோ தந்தையுடனோ இருக்க வேண்டும்; எனினும் தந்தையுடன் இருப்பதே வலியுறுத்தப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய சட்டம்.

இங்கோ குழந்தைகள் இருந்தால், அப்பெண் தன் சுகதுக்கங்களை மறந்து, அக்குழந்தைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்க்கையைத் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறையாகிவிட்டது. தாய் என்றால் தியாகத்தின் திருவுரு என்று சொல்லிச் சொல்லியே, பெண்ணாக அவளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஸ்லாமிய சட்டப்படி, விவாகரத்து பெற்ற பெண், மறுமணம் வரை தந்தை அல்லது சகோதரர்கள் பொறுப்பில் ஆகிறாள். அவளோடு, அவளின் குழந்தைகளுக்கும் அவர்கள் செலவு செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அவளின் முதல் திருமணத்திற்கென செய்த செலவுகளே பெரும் கடனாகி நிற்கும் நிலையில், இப்போதும் நிரந்தரமாக அவளைப் பராமரிக்கும் நிலை ஏற்படுத்திய பொருளாதாரச் சுமையின் காரணமாக, அவளை வெறுப்புடன் நடத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பல குடும்பங்களில் சம்பளமில்லா வேலைக்காரி நிலை என்றால், சில இடங்களில் கழிவிரக்கம் காரணமாக அதிகாரம் செலுத்தும் நாத்தனாராக!!

இஸ்லாம் பெண்களுக்கு ஏற்றம் தருகிறது என்று சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மக்களைச் சொல்ல வைத்தது இஸ்லாத்திற்கு மாற்றமான நமது செயல்பாடுகளே!!

லீஃபா அபூபக்கர் அவர்களின் மனைவிகளில் ஒருவரான அஸ்மா பின்த் உமைஸ் என்பவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் ஜாஃபர் இப்னு அபூதாலீப் அவர்களின் மனைவியாக இருந்து, அவரின் மரணத்திற்குப் பின் அபூபக்கர்(ரலி) அவர்களை மணந்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் மரணித்தபின், அலீ இப்னு அபூதாலிப்(ரலி) அவர்களை மணந்தார்.

நபி(ஸல்) அவர்களின் முதல் திருமணமானது, கதீஜா(ரலி) அவர்களுக்கு மூன்றாவது திருமணம்!!

ஜாஹிலியா (அறியாமை) காலத்திற்கெல்லாம் போக வேண்டாம், இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் தவ்ஹீது அறியாத தர்ஹா காலத்தில்கூட, நம் பாட்டிகளுக்கெல்லாம் மறுமணங்கள் வெகுஇயல்பாக நடந்தது கண்டிருக்கிறோம்.

ஆனால், இன்று பலப்பல முன்னேற்றங்களைக் கண்ட, இஸ்லாமிய கொள்கைகள் சிறப்பாகப் புரியப்பட்டுள்ள இக்காலத்தில் பெண்ணுக்கு மறுமணம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது!!

ரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு திருமணம் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், அதுவுமே முடிவுக்கு வருமானால், தனியே கடந்தாக வேண்டிய அவளது மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்துதான் ஜமாத்தார்கள் நஷ்ட ஈடு, அதுவும் அவளது பெற்றோர் செலவு செய்த தொகைக்கு ஈடாகவே மீட்டுத் தருகிறார்கள்.

இதில் கணவனின் குடும்பத்தினர், செட்டில்மெண்டாக தாம் முன்னர் பெற்ற சீர்ப் பொருட்களையும் திருப்பிக் கொடுக்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பது, அப்பெண் அவற்றைத் தினமும் கண்முன் வைத்து கடந்த காலத்தை மறந்துவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவா??

எப்போதுமே விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசப்படும் இவ்வுலகில், மூலகாரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. அதுபோலத்தான் இங்கும், விவாகரத்தில் இஸ்லாம் பேணப்படுவதில்லை என்று கொதித்தெழும் நாம், திருமணத்தில் – திருமண வாழ்வில் இஸ்லாம் எள்ளளவும் பேணப்படுவதில்லை என்ற மூல காரணத்தைப் புறந்தள்ளிவிடுகிறோம்.

இதற்கு திருமண இருதரப்பு வீட்டாரோடு, திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாத்தாரும் காரணம்தான். ஆனால், மணமகன் வீட்டார்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை, ஏற்கனவே நமக்கிருக்கும் தனியார் சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதிலும் காட்ட வேண்டும். திருமண விஷயங்களில் முஸ்லிம் சட்டம் என்பது பலதார மணத்திற்கும், விவாகரத்தில் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பதற்கும் மட்டுமல்ல; திருமணம் என்பது பெண் வீட்டினருக்கு சற்றுகூட சுமையாக இல்லாமலும் இருப்பதும்தான் முஸ்லிம் சட்டம். பெண்ணுக்கு மறுமணம் என்பதும் இலகுவாக்கப்பட வேண்டும்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சமுதாய, இயக்க, ஜமாத் தலைவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். நமக்களிக்கப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு நம் சமுதாயத்தில் பெண்கள் நிலையை மேம்படுத்தி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அதைக் கொண்டு இஸ்லாத்தின் மேன்மையை எடுத்து சொல்லவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

ஒரு மகளின் திருமணச் செலவுகள், பெற்ற தந்தையின் வாழ்நாள் சேமிப்பையே மொத்தமாகக் காலி செய்யும் நிலை மாறாதவரை, விவாகரத்து என்பதும் கணவனின் ஒருசில ஆண்டுகால சேமிப்பை உறிஞ்சுவதாகத்தான் இருக்கும்.

என்றைக்கு திருமணங்கள் முழுமையாக இஸ்லாமிய முறைப்படி நடக்கின்றனவோ அப்போதுதான், அக்காலத்தில் நடக்கும் மிகச் சொற்ப விவாகரத்துகளும் இஸ்லாமிய முறைப்படி நடக்கும்!!


இஸ்லாமிய மாதமிருமுறை இதழான ”சமரசம்” 2015 டிசம்பர் 16-31 பதிப்பில் வெளிவந்தது.

Post Comment